Advertisement
விமர்சனம்

கேணி

படம் : கேணி
நடிப்பு: பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, ஜாய் மேத்யூ, தலைவாசல் விஜய், பிளாக பாண்டி
ஒளிப்பதிவு: நவுஷத் ஷெரீப்
இசை: எம்.ஜெயச்சந்திரன்
தயாரிப்பு: சஜீவ் பி.கே., ஆன் சஜீவ்
இயக்கம் எம்.ஏ.நிஷாத்
மண்ணுக்கு தாகம் எடுத்தால் வறட்சிதான் மிஞ்சும். முப்போகம் விளைந்த தமிழக மண் ஒரு கட்டத்தில் வறட்சியின் பிடியில் சிக்குகிறது. ஜெயப்பிரதா கணவருக்கு சொந்தமான நிலம் தமிழகத்தில் இருக்கிறது. அரசியல்வாதிகள் சூழ்ச்சி காரணமாக வீடு மட்டும் தமிழக எல்லையிலும், அவர்களுக்கு சொந்தமான கிணறு கேரளா எல்லைக்கும் பிரிக்கப்படுகிறது. கைக்கு எட்டும் தூரத்தில் கிணற்றில் நீர் இருந்தும் தாகத்தை தீர்க்கக்கூட நீர் கிடைக்காமல் தமிழக எல்லையோர கிராம மக்கள் தத்தளிக்கின்றனர். அவர்களின் தாகத்தை போக்க போராட்டத்தை முன்னெடுக்கிறார் ஜெயப்ரதா. அரசியல்வாதிகள் ஆக்ரிமிக்க எண்ணும் தனது கிணற்று பகுதி நிலத்தையும் அதைச் சார்ந்த கிராமத்தையும் மீட்க மறியலில் ஈடுபடுகிறார். கைதாகிறார். பிரச்னை கோர்ட்டுக்கு செல்கிறது. கிராம மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. அதைக்கேட்டு மகிழும் கிராம மக்கள் கிணற்றில் நீர் எடுக்க ஆவலாக ஓடிவரும்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த கிணற்றுத் தண்ணீருக்காக போராடினார்களோ அந்த கிணற்றை அரசியல்வாதிகள் மண்போட்டு மூடுகின்றனர். அதிர்ச்சி கிராமமக்களுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் கண்களையும் மிரள வைக்கிறது. அதற்கான தீர்வையும் ஜெயப்பிரதா கையிலெடுக்கும்போது போராளியாக மனத்தில் உயர்கிறார்.
இன்றைய காலகட்டத்துக்கு இருமாநிலத்துக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமான கதைக்களமாக தண்ணீர் பிரச்னையை அலசியிருக்கிறார் இயக்குனர் நிஷாத். உண்மை சம்பவத்தை அப்படியே திரைக்கதையாக நெய்து படமாக்கி இருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதாதான் இதுவரை ரசிகர்களின் ஞாபகத்தில் தங்கியிருந்தார். தற்போது அந்த இடத்தை அவரே ஓவர்டேக் செய்து போராட்ட பெண்மணி இந்திராவாக விஸ்வரூம் எடுத்து நிற்கிறார். இந்தவயதில் இவரால் இந்த களத்தை தோளில் சுமக்க முடியுமா என்ற சந்தேகம் எழும் நிலையில் ஆவேசம் பொங்க அரசு டாக்டரின் கன்னத்தில் பளார் அறைவிடும்போது சந்தேகத்துக்கும் பளார் அறைகொடுக்கிறார். கிராமத்து தலைவராக பார்த்திபனின் வார்த்தைகளில் வெடி வெடிக்கிறார்.  சில இடங்களில் துணிச்சலான வசனங்கள் கைதட்டலையும் எழ வைக்கிறது.
வழக்கறிஞராக நாசர், கலெக்டராக ரேவதி, நீதிபதியாக ரேகா , அரசியல்வாதியாக தலைவாசல் விஜய், பத்திரிகை ஆசிரியராக எம்.எஸ்.பாஸ்கர் கதையின் ஓட்டத்தை வேகப்படுத்துகின்றனர். எம்.ஜெயச்சந்திரன் இசையில் கே.ஜே.யேசுதாஸும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடும் அய்யா சாமி டைட்டில் பாடலை மிஸ் செய்யக்கூடாது. பல இடங்களில் மலையாள வசனங்கள் இது தமிழ் படமா மலையாள படமா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. நல்லவேளையாக மலையாள வசனங்கள் பேசும்போது அதற்கான அர்த்தத்தை சப்டைட்டிலில் இடுவது காட்சிகளை புரிய வைக்கிறது. 
கேணி-தண்ணீர் பிரச்னைகளுக்கு பேச்சுவார்தையில் தீர்வு கிடைக்காது சட்டம்தான் நிரந்தர தீர்வு தரும் என்ற கருத்தை நெத்தியடியாக சொல்லியிருக்கும் எம்.ஏ.நிஷாத் மலையாள பட இயக்குனராக இருந்தாலும் நியாயம் பேசி இருப்பது அவரது தோள் தட்டி பாராட்ட வைக்கிறது
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close