Advertisement
செய்திகள்

ஜெயலலிதா சமாதி அருகே ஆயுத படை போலீஸ்காரர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை

பாதுகாப்பு பணியில் இருந்தவர்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஜெயலலிதா சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸ்காரர்கள் 12 பேர் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 4 ஷிப்டுகளாக இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
நேற்று (மார்ச் 4) நள்ளிரவு 2 மணி ஷிப்டில் ஆயுதப்படை போலீஸ்காரர் அருள்ராஜ் உள்ளிட்ட 4 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் அருள்ராஜ் உள்ளே செல்லும் பாதையையொட்டி உள்ள இடத்தில் சமாதியின் உள்புறம் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4.50 மணிக்கு திடீரென ஜெயலலிதா சமாதி அருகில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்த போலீஸ்காரர்கள் திடுக்கிட்டு சென்று பார்த்தனர். அப்போது போலீஸ்காரர் அருள்ராஜ் தாடையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸ்காரர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அருண் ராஜை அருகில் திருவல்லிக்கேணியில் உள்ள கோசா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருண்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டதும் அருண்ராஜின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துள்ளது. அவருக்கு வயது 26.
தகவல் கிடைத்ததும் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் பர்வேஷ் குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி அருள்ராஜ் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
அருண்ராஜின் சொந்த ஊர் மதுரை பெருங்குடி. அங்கு பெற்றோர் வசித்து வருகிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வானார். சென்னையில் ஆயுதப்படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். 10 நாட்களுக்கு முன்புதான் மதுரை சென்று விட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறந்த சம்பவம் கேள்விப்பட்டு பெற்றோர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close